Rohit Sharma Test Retirement: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.
Rohit Sharma: ரோஹித் சர்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி
அந்த ஸ்டோரியில்,”அனைவருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை இங்கு அறிவிக்கிறேன். டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக அன்பு காட்டும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன்” என அறிவித்துள்ளார்.
Rohit Sharma: ஒருநாள் அரங்கில் தொடர்வார்
தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓபனிங் பேட்டராக விளையாடி வரும் ரோஹித் சர்மா அங்கு இம்பாக்ட் வீரராகவே விளையாடி வருகிறார். 38 வயதான ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையையும், சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்திருந்தார்.
ஆனால், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு ஒருநாள், டெஸ்டில் தொடர்வாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது. மேலும், கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 3-1 இந்திய அணி மிக மோசமாக இழந்திருந்தது. இதில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி மிகுந்த கேள்விக்கு உள்ளானது. டெஸ்டில் அவரது பேட்டிங்கும் பெரியளவில் இல்லை.
Rohit Sharma: ரோஹித் சர்மா திடீர் ஓய்வு ஏன்?
இந்நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவாரா அல்லது ரோஹித்தே தொடர்வாரா என்ற கேள்வியும் இருந்தது. மேலும், அவருக்கு பிசிசிஐ தரப்பில் டெஸ்டில் இருந்து மட்டும் கேப்டன்ஸி பொறுப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனாலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென விலகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ரோஹித் சர்மா விலகியிருப்பதன் மூலம் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் பும்ரா தானா அல்லது வேறு யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ரோஹித் சர்மா விலகியிருப்பதால் அந்த ஓபனிங் ஸ்பாட்டில் சாய் சுதர்சன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma: 2027 உலகக் கோப்பை வரை ரோஹித்…
மேலும், ரோஹித் சர்மா வரும் 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் அரங்கில் அவர் கேப்டனாகவே தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma: டெஸ்டில் ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் அரங்கில் அதிரடியான பேட்டராக இருந்தாலும் டெஸ்டில் ஒரு சுமாரான பேட்டராகவே இருந்து வந்தார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 116 இன்னிங்ஸில் 4301 ரன்களை அடித்திருக்கிறார். சராசரியும் 40.57 ஆக உள்ளது. 18 அரைசதங்கள் மற்றும் 12 சதங்கள் இதில் அடங்கும். ஒரே ஒருமுறை மட்டும் 200 ரன்களை டெஸ்டில் அடித்துள்ளார்.