பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

நியூயார்க்: பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூடி அவசரமாக ஆலோசனையை நடத்தியது.

அப்போது, பாதுகாப்பு சபை உறுப்பினர் நாடுகள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அப்போது பாகிஸ்தான் நாட்டுக்கு கடும் கண்டனத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதிவு செய்தது. கூட்டத்தில் பேசிய உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தானை குறி வைக்கும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது ‘தாக்குதல் சம்பவத்தை இந்திய ராணுவமே நடத்தியது’ என்று கூறிய பாகிஸ்தானின் பொய்யை ஏற்க உறுப்பு நாடுகள் ஏற்க மறுத்தன. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல் குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்களை அதிகரிக்கும் என்று உறுப்பு நாடுகள் குற்றம் சாட்டின. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த ஆலோசனையின் போது, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பாகிஸ்தான் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பினர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், நிருபர்களிடம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அசிம் இப்திகார் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் மீது எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.

கூட்டத்தில் பேசிய ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் மே மாதத்துக்கான தலைவரும், கிரேக்க நாட்டின் பிரதிநிதியுமான தூதர் இவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறும்போது, “இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே போர்ப்பதற்றம் எழுந்துள்ள நிலையில், இந்த விவாதம் முக்கியமானது. பதற்றங்களுக்கு தீர்வு காண உதவிகரமாக நாம் இருக்கவேண்டும். இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் செயல்பட வேண்டும்” என்றார்.

சசி தரூர் கருத்து: போர்ப் பதற்றம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐ.நா. சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலருமான சசி தரூர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவோ பாகிஸ்தானுக்கு எதிராகவோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எந்த தீர்மானத்தையும் இயற்றாது என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானத்தை பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றாது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு ஆதரவு நாடான சீனா அதை எதிர்க்கும். அதைப் போலவே இந்தியாவுக்கு எதிராக எந்தத் தீர்மானம் வராது. ஏனெனில் பல நாடுகள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும்.

இரு நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்தையும், முறையான கூட்டங்கள் மூலமாகவோ அல்லது முறைசாரா ஆலோசனைகள் மூலமாகவோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நாடு தனக்கு நன்மை கிடைக்கும் என நினைக்கிறது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.