சென்னை: பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்றக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பாஜகவினர் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் துணையோடு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை(இன்று) போர் பதற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறோம்.
அதன்படி, மத்திய அரசின் உத்தரவின்படி, சென்னையில் இருக்கும் பாகிஸ்தானியர்களை மாவட்ட ஆட்சியர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து இதுவரை எத்தனை பாகிஸ்தானியர்கள் வெளியேறியிருக்கிறார்கள் என்ற தகவலை தமிழக அரசு வெளியிடலாம்.
அதேநேரத்தில், தமிழகத்தில் எங்கேயாவது பாகிஸ்தானியர்கள் இருந்தால், பொதுமக்களும் அடையாளம் கண்டு அரசுக்கு தெரிவிக்கலாம். பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல, பல இடங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் சட்டவிரோதமாக தமிழகத்தில் இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாக சீர்கேடால் காஷ்மீரில் 58 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் மோடியை குறை சொல்லி வருகிறார். காங்கிரஸ் கட்சி மக்களை கோழைகளாக்கி வைத்திருந்தார்கள். கோழைகளாகவே ஆட்சி நடத்துகிற கட்சி காங்கிரஸ். வீரம் செறிந்த கட்சியாக இன்று பாஜக ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.