புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. அப்போது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு முஸாபராபாத் பகுதியில் உள்ள மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்போது, “வெடி சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அப்போது மீண்டும் குண்டு வெடித்தது. இதனால் அச்சமடைந்த நாங்கள், குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார்.
பாரதத்தின் பதிலடி: அமைச்சர் அமித் ஷா பதிவு: பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்களை கொன்றதற்கான பாரதத்தின் பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர் என்று அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நமது ஆயுதப் படைகள் குறித்து பெருமை கொள்கிறேன். பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்களை கொடூரமாக கொன்றதற்கான பாரதத்தின் பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. தீவிரவாதத்தை வேருடன் ஒழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
இந்திய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தின. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத முகாம்கள் சேதமடைந்தன. இது தொடர்பான பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.