மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப்பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.எஸ்.ரமேஷ், எம்.வேல்முருகன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி தலைமையில் உயர் நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல திமுக எம்.பி பி.வில்சன், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசின் சார்பில் போலீஸாரின் அணிவகுப்புடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் தந்தை ஆர்.ஜெய்பிரசாத் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் லட்சுமி. கடந்த 1969-ம் ஆண்டு மார்ச் 15 அன்று தஞ்சாவூரில் பிறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் பூர்வீகம் அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம். வேலூரில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பிஏ வரலாறும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறும் முடித்தார்.

அதன்பிறகு டெல்லியில் சட்டப்படிப்பை முடித்த இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்த 1997-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் ஏ. இளங்கோவிடம் ஜூனியராக பணியாற்றினார். கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் மறைவையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வுகள் மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவுப்படி, தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி இன்று (மே 7) ஒருநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.

நீதிபதியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.