புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.
இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யாவின் கலினின்கிராத் நகரின் கப்பல் கட்டுமான தளத்தில் ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலின் அனைத்து சோதனை ஓட்டங்களும் நிறைவு பெற்றுள்ளன.
இந்திய கடற்படையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வீரர்கள் தற்போது ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பலில் முகாமிட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். மே 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் போர்க்கப்பல் ஒப்படைக்கப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் புதிய போர்க்கப்பல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும்.
கர்நாடகாவின் கர்வார் கடற்படைத் தளத்தை மையமாகக் ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் செயல்படும். இது 3,900 டன் எடை, 125 மீட்டர் நீளம், 15.2 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம்.
ஐஎன்எஸ் துமால் போர்க்கப்பலில் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதோடு ஸ்டில் ரக ஏவுகணைகள், தானியங்கி துப்பாக்கிகள், நீர்மூழ்கி குண்டுகள், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள் உள்ளிட்டவை போர்க்கப்பலில் பொருத்தப்பட்டு உள்ளன.
ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பலை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் அந்த நாடு வழங்கியிருக்கிறது. இதன்படி இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்எஸ் திரிபுத், ஐஎன்எஸ் தவஸ்யா என்ற பெயர்களில் புதிதாக 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஐஎன்எஸ் திரிபுத் போர்க்கப்பல் அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இதேபோல ஐஎன்எஸ் தவஸ்யா போர்க்கப்பல் வரும் 2027-ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும். இவ்வாறு இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.