புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது.
இந்த டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வி காண சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் விராட் சிறப்பாக செயல்படாததே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரையும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வேண்டும் என கருத்துகள் வலுத்தன. இதன் காரணமாக அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்குமா? என கேள்வி எழும்பி உள்ளது.
இந்நிலையில், ரோகித், விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார்களா? என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
முதலில், ஒரு பயிற்சியாளரின் வேலை அணியை தேர்வு செய்வது கிடையாது. அணியை தேர்வு செய்வது தேர்வாளர்களின் பணியாகும். ஒரு ஆட்டத்தில் ஆடும் லெவன் வீரர்களை மட்டுமே பயிற்சியாளர் தேர்ந்தெடுப்பார். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை அணியில் ஒரு அங்கமாக இருப்பார்கள். கிரிக்கெட்டை நீங்கள் எப்போது தொடங்குகிறீர்கள், எப்போது முடிக்கிறீர்கள் என்பது உங்களது தனிப்பட்ட முடிவாகும்.
ஒரு வீரரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் போது அவரை பயிற்சியாளரோ, தேர்வு குழுவினரோ, இந்திய கிரிக்கெட் வாரியமோ எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று சொல்ல முடியாது. 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் ஆடுவார்களா? என்பது அவர்களது செயல்பாட்டை பொறுத்து அமையும். அவர்கள் செயல்படும் விதம் தான் அவர்களுடைய தேர்வை உறுதி செய்யும்.
அவர்களது ஆட்டம் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை உலகமே பார்த்தது. எந்தவொரு வீரரும் தங்களது பிரியா விடை போட்டியை நினைத்து கிரிக்கெட் ஆடுவது கிடையாது. அதனை விட நாட்டுக்காக போட்டியை எப்படி வென்று கொடுப்பது என்ற முயற்சியில் தான் கவனம் செலுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.