மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது.
குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றிபெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திதிரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அடித்த 43 ரன்களையும் சேர்த்து அவர் இந்த தொடரில் இதுவரை 508 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரில் 500+ ரன்களை கடந்ததன் மூலம் விராட், ஸ்ரேயாஸ் உடன் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் சுப்மன் கில் இணைந்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் கேப்டனாக (26 வயதிற்குள்) 500+ ரன்களை அடித்த 3வது வீரர் என்ற சாதனையை கில்(508* ரன், 2025) படைத்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி (634 ரன், 2013), ஸ்ரேயாஸ் ஐயர் (519, 2020) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.