Operation Sindoor : இந்தியாவின் துல்லிய தாக்குதலை விளக்கிய பெண் அதிகாரிகள்! – யார் இவர்கள்?

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

Operation Sindoor
Operation Sindoor

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்து தாக்கி இருக்கிறது.

விளக்கிய பெண் அதிகாரிகள்!

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங், என இரண்டு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி

கர்னல் சோபியா குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவர். இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் படைக்கு தலைமைத்  தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியான ‘ எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18 ‘ இல் இந்திய அணியை அவர் வழிநடத்தி இருக்கிறார்.  

தாக்குதலை விவரித்த கர்னல் சோபியா குரேஷி, “இராணுவக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கோட்லியில் அமைந்துள்ள குல்பூர் பயங்கரவாத முகாம் மீது இந்திய ஆயுதப் படைகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த முகாமில்தான், ஏப்ரல் 20, 2023 அன்று பூஞ்சில் நடந்த தாக்குதல், ஜூன் 9, 2024 அன்று யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீதான தாக்குதல் ஆகிய தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT)வில் பயிற்சி அளிக்கப்பட்டது.” என்றார்.

வியோம்கா சிங்
வியோம்கா சிங்

விங் கமாண்டர் வியோம்கா சிங்கை பொறுத்தவரை அவர் பொறியியல் படித்திருக்கிறார். இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்ட அவர், டிசம்பர் 18, 2019 அன்று பறக்கும் பிரிவில் நிரந்தர ஆணையை பெற்றிருக்கிறார். இதுவரைக்கும் அவர் 2,500 க்கும் மேற்பட்ட மணிநேர விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். பல மீட்புப் பணிகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

தாக்குதலை விவரித்த விங் கமாண்டர் வியோமிகா சிங், “கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் பரவியிருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை இராணுவம் வெற்றிகரமாக குறிவைத்து அழித்தது.

பொதுமக்களுக்கும், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும் தவிர்க்க தீவிரவாதக் குழுக்களின் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்தவொரு எதிர்வினையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.