RETRO: " 'ரெட்ரோ' படத்தின் லாபத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி" – சூர்யா நெகிழ்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 படமான ‘ரெட்ரோ’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாரயணின் இசையில் ‘love laughter war’ காதலும், கோபமுமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (மே 7) கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தனர்.

Retro

இந்த வெற்றியை அடுத்து ‘ரெட்ரோ’ படத்தின் லாபத்திலிருந்து அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி வழங்கியிருக்கிறார் சூர்யா.

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி

இதுகுறித்து வெளியிட்டுள்ள அவரது கடிதத்தில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.

‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி

நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ்

அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி

ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வியே கேடயம்

விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்.” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.