‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்திய ராணுவ நடவடிக்கை: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தியுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: பாரத தாய் வாழ்க. ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் தொடக்கம்தான்.

முதல்வர் ஸ்டாலின்: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது தேசத்துக்காக நமது ராணுவத்தினருடன் தமிழகம் உறுதியாக நிற்கும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மனிதத்துக்கே எதிரானது. இத்தகைய பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ திடமாக நிரூபித்துள்ளது. இந்திய ராணுவத்தின் தீரம் பெருமைக்குரியது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் மீது முழுவீச்சோடு போரை தொடங்க அனைத்து காரணங்கள் இருந்தும், பழிவாங்கலைவிட துல்லியமான திட்டமிடலையும், வீண் குழப்பத்தைவிட உயிரிழந்தோருக்கான நீதியையும் மட்டுமே நமது நாடு தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் பாரதத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு இந்திய ராணுவம் காட்டியுள்ளது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேச ஒற்றுமை குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.

மநீம தலைவர் கமல்ஹாசன்: பெருமைமிக்க இந்தியா தனது வலிமையான படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் பிளவுபடாத ஒரு தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

தவெக தலைவர் விஜய்: இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்.

நடிகர் ரஜினிகாந்த்: ஒரு போராளியின் சண்டை தொடங்கியுள்ளது. இலக்கை அடையும் வரை இனி நிற்கப்போவது இல்லை. ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் மோடியோடு நிற்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: இதுதான் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நடிகர்கள் சிரஞ்சீவி, அக்‌ஷய் குமார், அல்லு அர்ஜுன், சுனில் ஷெட்டி, ஜூனியர் என்டிஆர், நடிகைகள் கங்கனா ரனாவத், சமந்தா, சம்யுக்தா உள்ளி்ட்ட பலரும் ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.