ஐம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சிந்து நதி நீருக்கு தடை, வர்த்தக நிறுத்தம் உள்ளிட்டவைகளை நிறுத்தியது.
இச்சூழலில் நேற்று (மே 07) இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷ் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுக்காப்பை அதிகரித்து உள்ளனர். வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருக்கும் 21 விமான நிலையங்களை நேற்று (மே 7) முதல் மே 10 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 11ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியை வேறு மைதானத்திற்கு பிசிசிஐ மாற்றி உள்ளது.
அதாவது, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 61வது போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால், இப்போட்டியை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ.
இது தொடர்பாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அனில் படேல் கூறியதாவது, மே 11ஆம் தேதி நடைபெறும் மும்பை – பஞ்சாப் இடையேயான போட்டியை அகமதாபாத்தில் நடத்துக்கிறோம். இது தொடர்பாக கடைசி நேரத்தில் பிசிசிஐ எங்களிடம் கேட்டது. அதனை ஏற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று (மே 08) மாலை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அகமதாபாத் வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: CSK: மாற்றத்தால் கிடைத்த வெற்றி.. இத முன்னாடியே பண்ணிருக்கலாம்?
மேலும் படிங்க: ரோகித் சர்மா ஓய்வு.. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார்?