Dhoni retirement news : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து வெளிப்படையாக பேசினார். நிறைய பேர் என்னுடைய ஓய்வு அறிவிப்பு எப்போது என பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என தோனி கூறியுள்ளார். நான் நீண்ட வருடங்களாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கும், உங்களும் தெரியும். எனக்கு இபோது 43 வயதாகிறது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. அதற்காக நான் 6 முதல் 8 மாதங்கள் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதிகளும், அந்த அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான வலிமையும் இருக்குமா? என என்னால் இப்போது சொல்ல முடியாது.
ஆனால், நான் விளையாட வேண்டும் என்பதையே ரசிகர்கள் எதிர்பார்கின்றனர், விரும்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி செய்வேன் என எம்எஸ் தோனி கூறியுள்ளார். என்னுடைய ஓய்வு முடிவு எப்போது என தெரியாததால் பலர் நான் விளையாடும் போட்டிகளை வந்து பார்க்கின்றனர். அவர்களுக்காக நிச்சயம் கடினமாக உழைப்பேன். அதேநேரத்தில் இப்போது எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. ரசிகர்கள் காட்டும் அன்பும், ஆதரவும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என தோனி தெரிவித்துள்ளார். தோனியின் இந்த அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் பிளே ஆஃப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இருப்பினும் புள்ளிப் பட்டியலில் கவுரமான இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்கிறது. அந்தவகையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அத்துடன் இந்த ஐபிஎல் தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருப்பதால், அதில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தில் இருந்து ஒருசில இடங்கள் முன்னேறலாம்.