இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா நேற்று பதில் தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது, அதனை இந்திய ராணுவம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அதிக பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேறும்படி ஐபிஎல் நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது. முதலில் போதிய வெளிச்சம் இல்லை என்பதன் காரணம் போட்டி நிறுத்தப்பட்டது. பிறகு அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாளை இரு அணிகளிலும் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகளை முழுவதுமாக நிறுத்தலாம் என்ற யோசனைகளையும் இந்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி ரூபாய் வணிகம் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படும் என்பதால் என்ன மாதிரியான முடிவுகளை இந்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.