தர்மசாலா,
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்து விடலாம்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகள் எடுத்துள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை ருசித்த அந்த அணி அதன் பிறகு 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டு தடுமாறுகிறது.
டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கல் இன்றி அடுத்த சுற்றுக்குள் நுழையலாம். இரண்டில் வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டியது வரும். ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும்.
பெங்களூரு, கொல்கத்தாவிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த டெல்லி அணி, ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 133 ரன்னில் முடங்கியது. அந்த ஆட்டத்தில் வருணபகவான் உதவியால் தோல்வியில் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விட்டது. இவ்விரு அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் டெல்லியும் வெற்றி பெற்றிருக்கின்றன.