நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தாய் ராஜி தாஸ் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைத்தள பக்கங்களில்,
“அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே” என க்ளாசிக்கல் சென்டிமெண்ட் பாடலான ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகளைப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அவரது அம்மா மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருப்பதை பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் 17 வயதிலேயே காவல்துறை பணியிலிருந்த அவரது தந்தை மரணமடைந்ததால், அம்மா ராஜிதான் அனைத்து குடும்ப விவகாரங்களையும் கவனித்துக்கொண்டுள்ளார். அவரது சகோதரரிடம் கடன் வாங்கி சிவகார்த்திகேயனைப் படிக்க வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் கலைத்துறையில் மிளிர முயற்சி செய்துகொண்டிருந்த காலத்தில், குடும்பத்தினர் அதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால் இதனால் சிவகார்த்திகேயனுக்கு எப்போதும் அவர் அம்மா மீது வெறுப்போ கோபமோ உண்டானதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்னரான பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் அம்மா குறித்து அவரது சகோதரி கௌரி அவள் விகனுக்கு அளித்த பேட்டியில், “அப்பாவோட இழப்பால அம்மா நிலைகுலைஞ்சு போயிட்டாங்க. ஒரு வருஷம் அம்மாவால அந்த இழப்புல இருந்து மீள முடியல. அதுக்கப்புறம்தான், பிள்ளைங்க படிப்பு பாதிக்கப்படக்கூடாதுன்னு அவங்க மனசைத் தேத்திக்கிட்டாங்க. காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது எனக்கு மாமா பையனோட திருமணம் நடந்தது. அப்பா, எங்களோட கல்யாணத்தை எப்படி பண்ணணும்னு ஆசைப்பட்டாங்களோ, அதேமாதிரி விமரிசையா பண்ணினாங்க அம்மா. ” எனக் கூறியுள்ளார்.
இன்று 70 வயதாகும் சிவகார்த்திகேயனின் தாய், இப்போது அவருடன்தான் வசித்து வருகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து பேசிய கௌரி, “அம்மா இப்போ தம்பிகூடத்தான் இருக்காங்க. `குலதெய்வம் கோயிலுக்குப் போகணும், திதி கொடுக்கணும்’ இப்படி என்ன சொன்னாலும் அம்மா சொல்லிட்டா மறுபேச்சு கிடையாது.” எனப் பேசியிருந்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
