ஜம்முவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: முறியடிப்பதில் இந்தியா தீவிரம் – எல்லை பகுதிகளில் பதற்றம்

ஸ்ரீநகர்: ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல். இருப்பினும் இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளது இந்திய பாதுகாப்பு படை. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்.

எல்லை பகுதிகளில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி என தகவல். உதாம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை, குஜராத் மாநிலத்தின் எல்லை பகுதி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

பாகிஸ்தான் தாக்குதலும் இந்திய பதிலடியும்: முன்னதாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், ‘மே 7-ல் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்று இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

மே 7 – மே 8 இரவு பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஒருங்கிணைந்த எதிர் தடுப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை தடுக்கப்பட்டன.

பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்தத் தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியா களத்தில் பதிலடி அளித்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.

16 இந்தியர்கள் உயிரிழப்பு: ஜம்மு – காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான், மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தூண்டப்படாத துப்பாக்கிச் சூட்டை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக 3 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இங்கும், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தும் வரை, பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – இதனிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முப்படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் முடியவடையவில்லை. இது தொடர்கிறது” என்றார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசு, பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மென்மேலும் முயற்சி செய்தால், அதற்கு களத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. விரிவாக வாசிக்க > தொடரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தானே பதற்றத்தை அதிகரிப்பதாக சாடி இந்தியா எச்சரிக்கை!

https://www.hindutamil.in/news/india/1360939-india-says-choice-of-de-escalation-is-with-pakistan-and-operation-sindoor-live-updates.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.