பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லை கிராமத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா சேதப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானும் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகத்துக்கு விரைந்துள்ளார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தானில் இந்திய தாக்குதல் வலுத்துவரும் நிலையில் அங்கே அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தச் சூழலில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. லாகூர் பிரதானப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அந்த பயண எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளதாலும், வான்வெளி ஊடுருவலுக்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாலும் லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தாக்குதல் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என அந்த பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.