ஜெய்சல்மார்: பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயணித்த எஃப் 16 ரக விமானத்தை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து வெளியேறிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்சல்மாரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையோர பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் ‘யாரும் வெளிவர வேண்டாம்’ என எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு 8.20 மணி அளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து இந்த தாக்குதல் இருந்தது. இதை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு கருவி மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவலாக பகிர்ந்தனர்.
எல்லை பகுதிகளில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி என தகவல். உதம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.