ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது.
மேலும் ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை எரிய செய்யக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.