ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

Rohit Sharma Test retirement :இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மே 7) மாலை திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட ஓய்வு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளால் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க இருந்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

2 டெஸ்ட் தொடர்களில் தோல்வி

38 வயதான ரோஹித் சர்மாவின் பார்ம் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக உள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு எதிராகவும், வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அவர் படுமோசமாக விளையாடினார். இதன் காரணமாக, அவர் மீது அதிக அழுத்தம் அதிகரித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இருந்து ரோகித் தன்னை அணியில் இருந்து விலக்கி வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவரது தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அதன் பிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 1-3 என்ற வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அத்துடன் ரோகித் சர்மா 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கு முன்பு, நியூசிலாந்துக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 91 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இங்கிலாந்து தொடரில் நீக்கம்

ஏப்ரல் 2025-ல் ஒரு பாட்காஸ்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தான் பங்கேற்கும் விருப்பத்தை ரோகித் தெரிவித்திருந்தார். இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக அவர் கூறியிருந்தார். தனது தலைமையில் இந்தியா அங்கு புது வரலாற்றைப் படைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பாட்காஸ்ட் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, ரோகித் சர்மா தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்

ரோகித் ஓய்வுக்கு பின்னணி என்ன?

ரோகித் சர்மா மீது பிசிசிஐ அதிருப்தியில் இருந்தது. குறிப்பாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்தவுடன் ரோகித் சர்மா தானாகவே ஓய்வை அறிவிப்பார் என பிசிசிஐ எதிர்பார்த்திருந்தது. ஆனால், அதனை அவர் செய்யாமல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவும் விருப்பம் தெரிவித்தார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கும் முடிவை பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் தெரிவித்தது. இந்த தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மா சர்தேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சர்ச்சை

ரோகித்தின் ஓய்வுக்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்து விஷயங்கள் கசிந்தபோது, ரோகித் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே தகராறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தவிர, ரோகித்தின் பார்ம் படுமோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தோல்வி ஆகிய காரணங்களால் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

மேலும் படிங்க: ஆர்சிபி-க்கு ஷாக்.. விலகிய ஸ்டார் வீரர்.. அப்போ அவருக்கு பதில் இவரா?

மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வில்லை அடுத்த ஆண்டு நிச்சயமாக விளையாடுவேன் – தோனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.