புதுடெல்லி: இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7-ம் தேதி இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. பயங்கரவாதிகளும், அவர்களின் முகாம்களுமே குறிவைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு, புதன்கிழமை இரவு அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் ஆகிய இந்திய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயன்றது. எனினும், இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் தனது எஸ் 400 சுதர்சன சக்கரம் எனும் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கி அழித்தது.
அதோடு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களையும் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
“மேற்கு எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் இந்திய ஆயுதப்படைகளின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்,” என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.