புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் 30 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இறங்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது 24 குண்டுகளை வீசியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 48 மணிநேரத்தில் 2 முறை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லை மாநிலங்களில் 30 இடங்களில் உள்ள ராணுவ மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் 300 முதல் 400 ட்ரோன்களை அனுப்பியது. லடாக்கில் உள்ள சியாச்சின் ராணுவ முகாம் முதல், குஜராத்தில் உள்ள கட்ச் பகுதி வரை இந்த ட்ரோன்கள் பறந்து வந்தன.
இதையடுத்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்அபாய ஒலி எழுப்பப்பட்டு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால்,அப்பகுதிகள் இருளில் மூழ்கின.ஜம்மு, பதான்கோட், உதம்பூர், அக்னூர், சம்பா, பாரமுல்லா, குப்வாராஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ மையங்களில் வான் தாக்குதலை முறியடிக்க எல்-70 பீரங்கி, இசட்யு-23 எம்.எம் விமான எதிர்ப்பு துப்பாக்கி, சில்கா பீரங்கி, யுஏஎஸ், எஸ்-400 (சுதர்சன சக்கரம்) ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் அக்னூர், சம்பா, பாரமுல்லா, குப்வாரா பகுதிகளில் விழுந்து வெடித்தது. சுமார் 70 ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. பெரும்பாலான ட்ரோன்களில்ஆயுதங்கள் இல்லை. கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன. இந்திய பகுதியில் பாதுகாப்பு நிலவரங்களை உளவு பார்ப்பதற்காகவும், இந்தியாவின் வான் பாதுகாப்பை பரிசோதிப்பதற்காகவும் இந்த ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. இதனால் இந்திய தரப்பில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. அதை எல்லைபாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் நிலவரம் குறித்து குறித்துடெல்லியில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது: ‘
வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி: பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு இந்திய நகரங்களை நோக்கி அனுப்பிய நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கியில் தயாரானவை. அமிர்தசரஸ் மீது தாக்குதல் நடத்த இந்திய பாதுகாப்பு படைகளே திட்டமிட்டு, அதற்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதாக அந்நாடு பொய் தகவல் பரப்புகிறது.
ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி: இந்தியாவின் வான்பாதுகாப்பை பரிசோதிப்பதற்காகவும், உளவு தகவல்களை சேகரிக்கவும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை பாகிஸ்தான் ஊடுருவ செய்துள்ளது. தடயவியல் சோதனையில் இவை துருக்கியின் அசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள் என தெரியவந்துள்ளது.
விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் வியோமிகா சிங்: பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினாலும், விமான போக்குவரத்துக்கு அதன் வான் பகுதியை மூடவில்லை. இது ஆபத்தானது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே சர்வதேச பயணிகள் விமானம் பறந்து செல்வது பாதுகாப்பானது அல்ல. துருக்கி ட்ரோன்கள் மற்றும் பயணிகள் விமான போக்குவரத்தை பாதுகாப்பு கவசமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஷ்மீரில் பீரங்கி தாக்குதல்: காஷ்மீரின் ஜம்மு, சம்பா, பஞ்சாப்பின் பதான்கோட், பெரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பார்மர், பொக்ரான் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நேற்று இரவு மீண்டும் ஊடுருவின. அவற்றை இந்திய படைகள் தாக்கி அழித்தன. ஜம்முவில் நேற்று இரவு பீரங்கி குண்டு சத்தம் அடிக்கடி கேட்டதாக முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் பங்கேற்றனர். முப்படைகளின் முன்னாள் தளபதிகளும் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டு, பல்வேறு முக்கிய போர் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.