இஸ்லாமாபாத்: ராஜதந்திர ரீதியாக இந்தியா உடனான பதற்றத்தை தணிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் அறிவுரை வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகையான ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ராஜதந்திர அணுகுமுறையின் மூலம் தணிக்கப்பட வேண்டும் என்று தனது சகோதரரும், தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு நவாஸ் ஷெரீப் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பவை என்பதால், அமைதியை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய அனைத்து ராஜதந்திர வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்புகிறார். இந்தியாவுடன் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்க அவர் விரும்பவில்லை. இந்தியாவுடன் நல்லுறவை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நவாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டினார். மேலும், கார்கில் போரை எதிர்த்ததால் 1999-இல் தனது அரசாங்கம் வெளியேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“1993 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் எனது அரசாங்கங்கள் ஏன் தூக்கியெறியப்பட்டன என்பதை நான் அறிய விரும்புகிறேன். நாங்கள் கார்கில் போரை எதிர்த்ததால் இது நடந்ததா” என்று நவாஸ் கூறியிருந்தார்.
1999-ஆம் ஆண்டு இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ‘மீறியதாக’ நவாஸ் ஷெரீப் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார். “மே 28, 1998 அன்று, பாகிஸ்தான் ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. அதன் பிறகு மரியாதைக்குரிய வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம்… அது எங்கள் தவறு” என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
ஷரீஃப் குறிப்பிட்ட ஒப்பந்தம் “லாகூர் பிரகடனம்” ஆகும். அதில் அவரும் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் பிப்ரவரி 21, 1999 அன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கையெழுத்திட்டனர். இருப்பினும், கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தான் துருப்புக்கள் ஜம்மு – காஷ்மீரில் உள்ள கார்கில் மாவட்டத்தில் ஊடுருவி, கார்கில் போருக்கு வழிவகுத்தன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.