தர்மசாலா,
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், பஞ்சாப் – டெல்லி போட்டி நிறுத்தப்பட உண்மை காரணம் என்ன? என்பது குறித்து பி.சி.சி.ஐ சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ தரப்பில் கூறியதாவது, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கோபுரம் ஒன்று பழுதடைந்து இருக்கிறது. மேலும் இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டு இருக்கிறது.