புதுடெல்லி,
காஷ்மீரில் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் 26 அப்பாவிகளின் உயிரை குடித்தது.
இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதிபூண்டது. இதற்காக ஆயுதப்படைகளுடன் இணைந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக விரிவான திட்டம் வகுத்தது. அதை கடந்த 7-ந்தேதி நள்ளிரவு செவ்வனே செயல்படுத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்குள் நுழையாமல் இந்திய எல்லையில் இருந்தே நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியானதும் ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய அம்சம் ஆகும்.
ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக தொடங்கிய இந்தியா, இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் எதுவும் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் அடாவடியில் இறங்கியது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்றது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலில் இறங்கியது. மேலும் பொதுமக்கள் வாழும் பகுதிகளையும் இலக்காக கொண்டிருந்தது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் எல்லைக்கு அப்பால் இருந்து இந்த தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றியது.
ஆனால் பாகிஸ்தானின் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஒருங்கிணைந்த டிரோன் எதிர்ப்பு தளவாடங்கள் நடுவானிலேயே வழிமறித்து அழித்தன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நகரத்தின் சில பகுதிகளில் பாக் ராணுவம் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் படை தலைமையகம் உட்பட முக்கிய ராணுவ நிலையங்களுக்கு அருகில் கண்ணி வெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பலுசிஸ்தான் தனி நாடு என்றும் அதைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் சொல்லி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அதை அறிவிக்க மறுத்து அங்கு ராணுவ அடக்குமுறையை பாகிஸ்தான் ஏவிவிட்டிருந்தது. அதைத் தாண்டியும் பலுசிஸ்தான் விடுதலைபடை அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். இப்போது இந்தியத் தாக்குதலால் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில், சத்தமில்லாமல் பலுசிஸ்தான் விடுதலை படையினரும் பாகிஸ்தான். ராணுவத்தை ஓட விட்டு வருகின்றனர்.
கிழக்கே இந்தியா, தென்மேற்கே பலுச் விடுதலைப்படை என ஒரே நேரத்தில் இருவேறு தாக்குதலை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.