IPL 2025: ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு… பிசிசிஐ வைத்த ட்விஸ்டை பாருங்க!

IPL 2025, India Pakistan War: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மீதமுள்ளவை ஒரு வார காலத்திற்கு உடனடியாக நிறுத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான அணி உரிமையாளர்கள், தங்கள் வீரர்களின் நலன் மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள், ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய நபர்களுடனும் உரிய ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகவும் செயல்படுவது விவேகமானது என்று பிசிசிஐ கருதுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, சூழலை விரிவாக மதிப்பிட்ட பிறகே மற்ற போட்டிகளின் புதிய அட்டவணை மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். கூடுதல் அப்டேட்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த முக்கியமான நேரத்தில் பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கும். இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் நமது நாட்டு மக்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். 

சமீபத்திய பயங்கரவாத தாக்குதல் (பகல்காம்) மற்றும் பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதிலடியை கொடுத்து, ​​ஆபரேஷன் சிந்தூர் கீழ் இந்திய ராணுவத்தின் வீர முயற்சிகள் தொடர்ந்து நாட்டைப் பாதுகாத்து ஊக்குவித்து வருகின்றன. நமது ஆயுதப்படைகளின் துணிச்சல், விவேகம் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு வாரியம் வணக்கம் செலுத்துகிறது.

தேசம் முழுவதும் கிரிக்கெட்டை நோக்கி மிகுந்த ஆர்வம் இருந்தாலும், தேசத்திதன் இறையாண்மை, ஒருமைப்பாடு, நமது நாட்டின் பாதுகாப்பையும் விட பெரியது எதுவுமில்லை. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ ஆதரிக்கும். நாட்டின் சிறந்த நலனுக்காக அதன் முடிவுகளை எப்போதும் சீரமைக்கும்” என குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதாக இருந்தது. தற்போது துணை கண்டத்தில் நிலவும் பதற்ற சூழலில் இந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படலாம். மேலும் இந்த பதற்ற சூழல் தணியாமல், தொடரும்பட்சத்தில்  ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் சில வெளிநாட்டு வீரர்களால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். தற்போதைய நிலவரப்படி குஜராத், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகள் டாப் 4 இடத்தில் உள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.