இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏறத்தாழ ஆரம்பக்கட்ட போர் மூண்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் இந்தியா தக்க பதலடி கொடுத்து வருகிறது. வியாழக்கிழமை மாலை திடீரென பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு இடங்களில் வரிசையாக தாக்குதல்களை நடத்தியது. இதனால், தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எல்லையோர பகுதிகளில் பிளாக்அவுட் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால் இப்போட்டியை கட்டாயம் நிறுத்த வேண்டியதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பிளேயர்கள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளனர். ஏனென்றால் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகாமையில் தரம்சாலா இருப்பதால் எந்தநேரமும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பிளேயர்கள் ஹோட்டல்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விமான போக்குவரத்துகள் அந்த பகுதிகளில் தடை செய்யப்படிருப்பதால், இரு அணி பிளேயர்களும் என்ன செய்வது என தெரியாமல் பயத்தில் தவித்தனர்.
இருப்பினும் மத்திய அரசு பிளேயர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் மூலம் டெல்லி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பிளேயர்களை டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிளேயர்கள் அழைத்துச் செல்லப்படும் ரயில் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இன்று காலை முதல் பிற்பகலுக்குள் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பிளேயர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், இன்று நடக்கும் ஆர்சிபி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் போட்டிக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை ரத்து செய்வது குறித்து பிசிசிஐ தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிலைமை பொறுத்து கடைசி நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என நேற்றிரவு நடந்த நள்ளிரவுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் இன்னும் அதிகரித்தால் ஐபிஎல் போட்டிகளை முழுமையாக ரத்து செய்யவும் பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரீரு நாட்கள் பொறுத்து பார்க்கலாம் என ஐபிஎல் நிர்வாகத்தின் இப்போதைய திட்டம். இன்றும் நாளையும் தாக்குதல் தீவிரமடையும்பட்சத்தில் ஐபிஎல் போட்டிகள் முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.