இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்னும் இந்த சீசனில் 16 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ மத்திய அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி பாதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.
மைதானத்தில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு வீரர்களும் ரசிகர்களும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். “ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளோம், வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமானது. அடுத்த சில மாதங்களுக்கு போட்டிகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். சர்வதேச போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு எப்போது நேரம் கிடைக்கும் என்பதை பொறுத்து தேதி பின்னர் தீர்மானிக்கப்படும். தற்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்” என்று பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம்சாலாவில் நேற்று போட்டி வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி தொடங்க தாமதமானது, பின்பு மழை குறுக்கிட்டதால் சரியான நேரத்தில் போட்டி தொடங்கப்படவில்லை. பத்து ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்த்தும் நிலையில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் 2025ல் தொடரில் ஏற்கனவே சன்ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வெளியேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஏழு அணிகள் பிளே ஆப்பிற்கு செல்ல போட்டி போட்டு வந்தனர். குறிப்பாக இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது அவர்களது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த PSL போட்டிகள் துபாய்க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.