வாஷிங்டன்: “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சி: இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா இன்று வலியுறுத்தியது. முன்னதாக, “போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார்.
கூடவே, பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடனும் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய ரூபியோ, “தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தன், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார். இந்த நிலையில், இந்திய நேரப்படி மாலை 5.33 மணிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ட்வீட்டில், இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா – பாக். மோதல்: நடந்தது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடித்துக் கொண்டிருந்தது.