India vs England, Team India Test Captaincy: ஐபிஎல் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என 17 போட்டிகள் மொத்தம் பாக்கி இருக்கின்றன. இதற்கான அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்.
IPL 2025: எப்போது ஐபிஎல் 2025 தொடர்?
வரும் ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உடன் மோதுகிறது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப்பை தக்கவைப்பதற்கும், தென்னாப்பிரிக்கா அதன் நீண்ட ஐசிசி கோப்பை தாகத்தை தணிப்பதற்கும் முட்டிமோதும் எனலாம்.
இதன்மூலம் இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதால் ஐபிஎல் தொடர் விரைவாக நிறைவுபெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஜாஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரபாடா, ரியான் ரிக்கில்டன், கார்பின் பாஷ், மார்கோ யான்சன், எய்டன் மார்க்ரம் என முக்கிய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
India vs England: இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா இங்கிலாந்துக்கு ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும். கடந்தாண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலியா தொடரை போன்று இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரும் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.
Team India: விராட் கோலியும் ஓய்வு பெறுகிறாரா?
புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியும் (2025 – 27) தொடங்குகிறது. அதுமட்டுமின்றி, கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவும் டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். எனவே அவருக்கு பதில் கேப்டனை மட்டுமின்றி ஓப்பனராக மற்றொரு வீரரையும் அணிக்குள் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விருப்பத்தையும் பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், முடிவை மாற்ற வேண்டும் என பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Team India: பும்ராவுக்கு கேப்டன்ஸி இல்லை?
ஒருவேளை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருங்கே இல்லாமல் போனால் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் டெஸ்ட் அணிக்குள் வரும் வாய்ப்புகள் ஏற்படும். சர்ஃபராஸ் கானுக்கு கூட வெளிநாட்டில் வாய்ப்பு கிடைக்கலாம். இதுமட்டுமின்றி, டெஸ்ட் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Team India: கேப்டன், துணை கேப்டன் யார்?
அடிக்கடி காயமடைவதை கருத்தில்கொண்டும், வேலைபளு மேலாண்மையை கருத்தில்கொண்டும் பும்ரா கேப்டன் பொறுப்பை மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேஎல் ராகுல் அணியில் தொடர்வார் என்றாலும் அவருக்கு கேப்டன்ஸி செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Team India: எப்போது ஸ்குவாட் அறிவிப்பு?
வரும் ஜூன் 6ஆம் தேதி இந்தியா இத்தொடருக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. அதற்குள் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி, நிறைவுபெற்றுவிடும் என கூறப்படுகிறது. எனவே, இங்கிலாந்து தொடருக்கான ஸ்குவாடை வருமே மே 16 அல்லது மே 17ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அன்றே புதிய கேப்டன் குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனலாம்.