ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார்.
அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதராக பணியாற்றும் விக்ரம் துரைசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு லண்டனில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டு உள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்.
இதுதொடர்பான புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன. ஐ.நா. சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருப்பது அந்த நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு விக்ரம் துறைசாமி தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார்.
அவர் நேற்று முன்தினம் கூறியபோது, “இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் உடல்களுக்கு பாகிஸ்தானின் தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்” என்று தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டது.