தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க சென்ற 9 மாணவர்கள், 4 மாணவிகள் தமிழக அரசு உதவியுடன் நேற்று இரவு டெல்லி அழைத்துவரப்பட்டனர். டெல்லியில் இருந்து மாணவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் நாமக்கல், கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள் கூறியதாவது: பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. எங்களுக்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் 60 கிலோமீட்டர் தொலைவு இருந்தது. நாங்கள் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தோம். இனிமேல் என்ன செய்வது என்று தெரியாமல், நாங்கள் தவித்துக் கொண்டு இருந்தோம். தமிழக அரசின் உதவி எண்ணுக்கு அழைத்தோம். தமிழக அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் எங்களுடைய மன அழுத்தம் குறைந்தது. பஞ்சாப்பிலிருந்து டெல்லி வரை நாங்கள் பேருந்தில் வந்தோம். தமிழக அரசு அதிகாரிகள், எங்களை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டனர். தற்போது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.