வாஷிங்டன்: போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். மோதல்கள் மேலும் வலுவடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவுடனான ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.