புதுடெல்லி: போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு கமாண்டர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், “வெளியுறவுச் செயலாளர் கூறியதுபோல இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல், வான் மற்றும் நிலம் என அனைத்து தளங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைகள் இந்தப் புரிதலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் முழுமையாகத் தயாராகவும் விழிப்புடனும் உறுதியாகவும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான சாகசமும் பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தீவிரப் போராட்டமும் தீர்க்கமான பதிலடியை கொடுக்கும். தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்க நாங்கள் முழுமையாக செயல்பாட்டு ரீதியாகத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பாகிஸ்தான் தனது ஜேஎஃப் 17 மூலம் நமது எஸ்-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறியது முற்றிலும் தவறு. அதேபோல், சிர்சா, ஜம்மு, பதான்கோட், பட்டிண்டா, நலியா மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள நமது விமானநிலையங்கள் சேதமடைந்ததாக தவறான பிரச்சாரத்தை பாகிஸ்தான் நடத்தியது. அந்த தவறான தகவல் பிரச்சாரம் முற்றிலும் தவறானது. மூன்றாவதாக, சண்டிகர் மற்றும் வியாஸில் உள்ள நமது வெடிமருந்து கிடங்குகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் பிரச்சாரம் செய்தது. இதுவும் முற்றிலும் தவறானது.
இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், நமது ராணுவம் இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பின் மிக அழகான பிரதிபலிப்பு என்பதையும் நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “இந்திய ஆயுதப் படைகள் மசூதிகளை குறிவைத்ததாக பாகிஸ்தான் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், இந்திய ஆயுதப்படைகள் நமது அரசியலமைப்பு விழுமியங்களின் பிரதிபலிப்பு என்பதையும் மிகத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறோம்.
அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் நாங்கள் மிக உயர்ந்த மதிப்பில் கருதுகிறோம். எங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வசதிகளை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன. எந்த மதத் தலங்களையும் இந்திய ஆயுதப்படைகள் குறிவைக்கவில்லை.
எங்கள் எஸ்-400 ஏவுகணை தளத்தை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த சில நாட்களாக, பாகிஸ்தான் மிகவும் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளது. அது நிலத்திலும் வான்வழியிலும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்களான ஸ்கர்டு, ஜகோபாபாத் மற்றும் போலாரி ஆகியவற்றில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதோடு, ஏடி ஆயுத அமைப்பு மற்றும் ரேடார் இழப்பு பாகிஸ்தான் வான்வெளியின் பாதுகாப்பை சாத்தியமற்றதாக்கியது. கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே, ராணுவ உள்கட்டமைப்பு, கட்டளை கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தளவாட நிறுவல்களுக்கு விரிவான மற்றும் துல்லியமான சேதம் ஏற்பட்டது. மேலும், அதன் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் மற்றும் மன உறுதியை முழுமையாக சீர்குலைக்க இரண்டு ராணுவ வீரர்கள் வழிவகுத்தனர்” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதன்மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபட்டத்தை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. வாசிக்க > இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்: ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல்