ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் நேற்று காலை குண்டு வீசன.
இது குறித்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. பஸ்ரூர் என்ற இடத்தில் உள்ள ரேடார் மையம், சியால்கோட்டில்உள்ள விமான தளத்திலும் குண்டுகள் வீசப்பட்டன.
இந்த விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகளை, இந்தியா மிகவும் கவனமாக தேர்வு செய்து தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ள ‘தி நுர் கான்’ விமானப்படை தளம், பாகிஸ்தான் விமானப்படையின் கட்டுப்பாட்டு தலைமையகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய பகுதியில் டரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ‘தி நுர் கான்’ விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் சாப் 2000 என்ற ரேடார் விமானம் உள்ளது. இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தியதில் இந்த விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. அதனால் இங்கு குண்டு வீசப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரஃபிக்கி விமானப்படை தளத்தில் மிராஜ் மற்றும் ஜேஎப்-17 ரக போர் விமானங்கைள பாகிஸ்தான் வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. அதனால் இங்கும் தாக்குதல் நடத்தப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள முரித் விமானப்படை தளம் பாகிஸ்தான் ட்ரோன்களின் தலைமையகமாக உள்ளது. இங்க பாகிஸ்தான் தயாரிப்பு ஹபார் -1, துருக்கி தயாரிப்பு பேராக்தர் டிபி2 மற்றும் அகின்சி ட்ரோன்கள் உள்ளன. கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் இங்கிருந்துதான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பியது. இவற்றில் பலவற்றில் ஆயுதங்கள் இல்லை. பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு வியோமிகா சிங் கூறினார்.
ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்: இந்திய விமானப்படை நேற்று காலை நடத்திய தாக்குதல் குறித்து பாக். ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்திரி கூறுகையில், ‘‘ராவல்பிண்டி சக்லாலாவில் உள்ள நுர் கான், முரித் மற்றும் ரஃபிக்கி விமானப்படை தளங்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. ஆனால், பாக். விமானப்படை விமானங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளன’’ என்றார். லாகூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ரஹ்மான் யான் கான் என்ற இடத்தில் உள்ள ஷேக்ஜயீத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இந்தியாதாக்குதல் நடத்தியதாக பாக். அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஃபதேச-1 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் பி.டிவி செய்தி வெளியிட்டது.