மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை ரோகித் சர்மா சந்தித்தார். குறிப்பாக பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்பிய ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இருப்பினும் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அவர் திடீரென ஓய்வை அறிவித்தார். இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் இடத்திற்கு பல்வேறு வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில் தமிழக இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் அவரது இடத்தில் களமிறங்கினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என தமிழக அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜபார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது , சாய் சுதர்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான ஒரு வீரர். அவரால் சிங்கிள்ஸ்ஸை அதிகளவு ரொட்டேட் செய்ய முடியும். அதேபோன்று தேவையான போது பவுண்டரிகளையும் அடிக்க முடியும். அதிலும் குறிப்பாக அவருடைய பேக் லிப்ட் மிகச் சிறப்பாக இருப்பதால் அவரால் தொடர்ந்து ரன்களை குவிக்க முடியும்.
உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல் தொடர்களில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் அவரால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும். ஏற்கனவே தமிழக அணிக்காக மிகச் சிறப்பாக ரன் குவித்து வரும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டால் பிரமாதமான ரன் குவிப்பை வழங்குவார்.
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுண்டி போட்டிகளில் பங்கேற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதால் இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிலும் அவர் நிச்சயம் அசத்துவார் என்று நம்பிக்கை தனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.