சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் `சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு’ நேற்று மாலை நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளியிட்டார். பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, செய்தி தொடர்பாளர் க.பாலு, செயற்குழு உறுப்பினர் ஈக்காட்டுத்தாங்கல் இரா.சிவகுமார், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உட்பட முக்கிய நிர்வாகிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநாட்டில் வன்னியர் சங்க கொடியை ராமதாஸும் அன்புமணியும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இடஒதுக்கீடு போராட்டம் குறித்து விளக்கப்பட்டது. ராமதாஸ் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் திரையிடப்பட்டது. மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நிச்சயமாக போராட்டம் அறிவிக்கப்படும். அது இதுவரை நடக்காத அளவிலான போராட்டமாக இருக்கும்.
அன்று நாம் தனியாக யானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறோம். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். நமது மக்களே நமக்கு ஓட்டு போடவில்லை. இனி அப்படியிருக்க கூடாது. அனைவரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
கூட்டணி பற்றி நான் முடிவு செய்வேன். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எம்எல்ஏவாக வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். கட்சியை உயிர் என்று நினைத்தால் தான் கோட்டையை பிடிக்க முடியும். இந்த கட்சி தனிமனிதனின் சொத்து அல்ல. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வருக்கு மனமில்லை: அன்புமணி பேசியதாவது – ஆளும் கட்சிகள் நம்மை வாக்கு வங்கிகளாக பயன்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வருக்கு மனமில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என பொய்யான செய்தியை பேசி வருகிறார். இந்த சமுதாயத்தை எப்படி முன்னேற்ற வேண்டும் என முதல்வர் திட்டமிட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்திருப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு கவலையில்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் ஒரே கையெழுத்தில் கணக்கெடுப்பை நடத்தியிருப்பார். பிற தலைவர்களைப் போல அத்துமீறு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இளைஞர்கள் அமைதியாக இருந்து படித்து வேலைக்கு போகச் சொல்வேன். நாம் ஆளக்கூடிய காலம் வந்துவிட்டது. பாமக ஆட்சிக்கு வந்தால் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்கள்தொகைக்கு ஏற்ப மேலும் 2 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். வடமாவட்டங்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே மாநாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.