அரசு மருத்துவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு பணி மூப்பு அடிப்படையில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, முதுநிலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியிடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த முதுநிலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
அடுத்த 4 மாதங்களில் முதுகலை படிப்பை முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு பணியிடம் வழங்குவதில் முன்னுரிமை தரப்பட வேண்டும். எத்தனையோ சிரமங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில், குறைந்தது 2 முதல் 4 வருடங்கள் வரை பணிபுரிந்துவிட்டு மேற்படிப்புக்கு வருபவர்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இந்த கலந்தாய்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு, பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மிகப்பெரிய குழப்பத்துக்கு வழிவகுப்பதாக அமையும்.
இனிமேல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் சிறப்பு மருத்துவர்கள் விவகாரத்தில் அரசு கொள்கையை அறிவிக்க வேண்டும். அதாவது எம்டி, எம்எஸ் முடித்திருந்தாலும் குறைந்தது 2 ஆண்டுகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு ஆண்டு மாவட்ட மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம் என்பதை அரசாணையாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் அரசுப் பணியில் சேர்வதற்கு மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதன்மூலம் கிராமப்புற மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த முடியும். மேலும், அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.