இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட் இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் பொய் தகவல்களை கூறி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிர்சா மற்றும் சூரத் விமானப்படை தளங்கள், ஆதம்பூரில் உள்ள எஸ்-400 ஏவுகணை தளம் ஆகியவற்றை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய். இந்தியாவின் முக்கியமான கட்டிடங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதும் பொய்.
மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அமிர்தசரஸ், ஆப்கானிஸ்தான் மீதும் இந்தியா குண்டுகள் வீசியதாக பாகிஸ்தான் பொய் தகவலை கூறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கன் மீது தாக்குதல் நடத்தியது யார் என ஆப்கன் மக்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. பல விஷயங்களில் இந்திய மக்கள், தங்கள் சொந்த அரசை விமர்சிக்கின்றனர் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அளிக்கும் பேட்டியில் கூறுகிறார். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
காஷ்மீர் அதிகாரி உயிரிழப்பு: ஜம்மு காஷ்மீரின் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் மாவட்ட வளர்ச்சி கூடுதல் ஆணையர் ராஜ் குமார் தாபா என்பவர் உயிரிழந்தார் . பெரோஸ்பூர், ஜலந்தர் உட்பட பல பகுதிகளிலும், பாக். தாக்குதலால் பொது மக்களின் சொத்துகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. பலர் காயம் அடைந்தனர் எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.