இந்தியா – பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற போர்களில் எல்லாம் இறுதியில் பாகிஸ்தான் பணிந்ததே வரலாறாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினையின் போது இந்து மன்னர் ஹரி சிங் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையலாமா அல்லது இந்தியாவுடன் இணையலாமா என முடிவெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்தியா பக்கம் சென்றுவிடுவார் என பாகிஸ்தான் பயந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
பழங்குடியின முஸ்லிம் படைகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் காஷ்மீரின் சில பகுதிகளை கைப்பற்றினர். அதுவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர். இந்தியா – பாகிஸ்தானுடனான் முதல் போர் கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகள் இடையே காஷ்மீர் விவகாரம் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன்பின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தில் தலையிட்டு கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி எல்லை கட்டுப்பாட்டு பகுதி உருவாக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே சண்டை நிறுத்தம் கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 1-ம் இரவு ஏற்பட்டது. காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் இந்திய கட்டுப்பாட்டில் வந்தன.
1965-ம் ஆண்டு போர்: ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இந்திய ராணுவம் முழு அளவில் தாக்குதல் மேற்கொண்டு முறியடித்தது. 17 நாட்கள் இந்த போர் நீடித்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சோவியத் யூனியனும், அமெரிக்காவும் தலையிட்டதால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1971-ம் ஆண்டு போர்: இந்தப் போர் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது காஷ்மீருக்காக நடைபெறவில்லை. தற்போது வங்கதேசமாக இருக்கும் கிழக்கு பாகிஸ்தான் தலைவர் ஹேக் முஜிப்பூர் ரகுமான், மேற்கு பாகிஸ்தான் தலைவர்யாஹ்யா கான் மற்றும் ஜுல்பிகர் அலி புட்டோ ஆகியோருக்கு இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா தலையிட்டு முழு அளவிலான போரில் இறங்கி வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கி கொடுத்தது. அப்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் 90,000-க்கும் மேற்பட்ட வீரர்களுடன், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது.
கார்கில் போர் 1999: பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை கடந்து கார்கில் பகுதிக்குள் ஊடுருவியது. இந்தியா 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி கார்கில் பகுதியை மீட்டது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 4,000 பேர் இறந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். அப்போதும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி படைகளை திரும்ப பெற வைத்தது. பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கெனவே மோசமாக இருந்ததால், சர்வதேச அளவில் தனிமைபடுத்தப்படுவோம் என உணர்ந்து பாகிஸ்தான் கார்கில் பகுதியை விட்டு வெளியேறியது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகப் பெரிய தோல்வி.
2016-ம் ஆண்டு தாக்குதல்: கடந்த 2016-ல் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
2019-ம் ஆண்டு மோதல்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ- முகமது முகாம்கள் மீது குண்டு வீசியது. பதிலுக்கு பாகிஸ்தான் விமானப்படை விமானங்களும் இந்திய வான் பகுதிக்குள் தாக்குதல் நடத்த ஊடுருவின. இதை இந்திய போர் விமானங்கள் தடுத்தன. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்திய இந்தியாவின் மிக்-21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து வெளியேறிய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் 2 நாளில் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
ஆபரேஷன் சிந்தூர் 2025: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாக். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டு கொன்றதற்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய விமானப்படை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசின. இதனால் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதை
இந்தியா முறியடித்தது. காஷ்மீர் எல்லை பகுதிகளிலும் பொதுமக்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய போர் விமானங்கள் நேற்று பாகிஸ்தானில் ஊடுருவி 3 முக்கிய விமானப்படை தளங்கள், ஆயுத கிடங்குகள் உட்பட பாகிஸ்தான் 8 ராணுவ மையங்கள் மீது குண்டுகளை வீசின. இதில் பாகிஸ்தானுக்கு மிகப் பெரியளவில் சேதம் ஏற்பட்டது.
இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. இதன்பின் அமெரிக்கா தலையிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய வலியுறுத்தியது. பணிந்து செல்ல பாகிஸ்தான் முன்வந்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் ஆகியவை நேற்று மாலை சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டன. அனைத்து போர்களிலும் பாரதம் வெற்றி சரித்திரம் படைத்தது.