புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.
தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியதாக தெரிகிறது. அவர் டெஸ்ட் கேப்டன் பதவி கேட்டதாகவும், ஆனால் அதற்கு பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் காரணமாக அவர் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பி.சி.சி.ஐ உள்ளது. பி.சி.சி.ஐ வட்டாரங்கள் அளித்த தகவலின் படி இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல விரும்பினால் விராட் கோலி போன்ற ஒரு அனுபவ வீரரை கேப்டனாக நியமிக்கலாம் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் இந்தியாவில் இருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு விராட் கோலியை கேப்டனாக்குவேன். அதேசமயம் சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.