ஸ்ரீநகர்,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நாட்டு எல்லை பகுதிகளில் நேற்று இரவு அமைதியான சூழல் நிலவியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எந்த விதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றும், நேற்று அமைதியான இரவாக இருந்ததாக இந்திய ராணுவம் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.