திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். “ஆரம்பகட்டத்திலேயே, புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா இன்று (மே 12) காலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நோயாளிகளிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போதைய நிலையில் பொதுமக்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மாநில அளவில் ஏற்கெனவே ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 20 லட்சம் பேருக்கு புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15.48 லட்சம் பேர் பரிசோதனை செய்தனர். அதில் 351 பேருக்கு புற்றுநோய் உள்ளது கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்து மாநில அளவில் கருர், திருப்பூர், வேலூர், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர்கள் உடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வுகளில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.