'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு – ஏன்?

Virat Kohli Test Cricket: டெஸ்ட் ஃபார்மட் என்பது கிரிக்கெட்டின் முதன்மையான மற்றும் பழமையான பார்மட் எனலாம். நீண்ட நாள் நாள்கள் நடப்பது, சிவப்பு பந்தில் விளையாடுவது என டெஸ்ட் பார்மட்தான் கிரிக்கெட் ஆதிவடிவம் எனலாம். டெஸ்ட் கிரிக்கெட் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது, பல ஜாம்பவான்களை கடந்து வந்துள்ளது. ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ஒரு தேவ தூதன் என்றால் அது விராட் கோலிதான்.

Virat Kohli: வார்னேவின் புகழாரம் 

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏன் முக்கியமானவர் என்பதை புரிந்துகொள்ள கிரிக்கெட் ஜாம்பவானும், ஆஸ்திரேலியா மூத்த வீரருமான ஷேன் வார்னேவின் இந்த கூற்றை படித்தாலே போதுமானது. “முதலாவதாக, விராட் கோலி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட்டுக்கான சிறந்த தூதர் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் சென்றதற்கும், அது நம்பர் 1 வடிவம் என்பதை நிலைநிறுத்தியதற்கும் விராட் கோலி மற்றும் பிசிசிஐக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”.

ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்த காலகட்டத்திலும், ஷேன் வார்னே (டெஸ்ட்) கிரிக்கெட்டின் தூதராக விராட் கோலியைதான் கூறுகிறார் என்றால் அப்போதே நீங்கள் புரிந்துகொள்ளலாம், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செய்தது என்ன என்பதை… அதேபோல், விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என சில நாள்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது கிரிக்கெட் ஜாம்பவானும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் பிரையன் லாரா போட்ட இன்ஸ்டா பதிவை படித்தால் விராட் கோலி ஏன் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை என்பது புரியவரும்.

Virat Kohli: ‘டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை…’

“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை!!. அவர் இதை ஒத்துக்கொள்வார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. விராட் கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் அவரின் பேட்டிங் சராசரியை 60க்கு மேல் கொண்டே போக போகிறார்” என லாரா பதிவிட்டிருந்தார். விராட் கோலியின் சமீபத்திய மோசமான ஃபார்ம், இந்திய அணியில் வீரர்கள் இடையே நிலவும் கடுமையான போட்டி, இளம் வீரர்களின் எழுச்சி ஆகியவையே விராட் கோலியை ஓய்வு குறித்து யோசிக்க வைத்திருக்கிறது என கூறினாலும் இவை நிச்சயம் விராட் கோலியின் ஓய்வுக்கு காரணமாக இருக்காது, இருக்கவும் கூடாது. இதை தாண்டி இதில் விராட் கோலியின் தனிப்பட்ட முடிவு இருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Brian Lara (@brianlaraofficial)

Virat Kohli: விராட் கோலியின் தனித்துவமான அணுகுமுறை

விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை அதளப்பாதளத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு வந்ததன் மூலமே ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் புத்துயிர் ஊட்டினார் எனலாம். விராட் கோலி களத்தில் காட்டிய வெறித்தனமான ஆட்டம், துணிச்சல், சளைக்காத போட்டி மனப்பான்மை ஆகியவையே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்தியது எனலாம். டெஸ்ட் கேப்டன்ஸியில் விராட் கோலி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் இந்திய அணியை வேற தளத்திற்கு கொண்டு சென்றது. 

SENA நாடுகளில் விராட் கோலியின் இந்த அணுகுமுறை இந்திய அணியை வேற தளத்திற்கு கொண்டுசென்றது. ஆஸ்திரேலியாவை தவிர தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட விராட் கோலியின் தலைமையில் வென்றதில்லையே என நீங்கள் சொல்வது எனக்கும் கேட்கிறது… ஆனால் தொடரை வென்றதை விட, முன்னர் சொன்னதுபோல் விராட் கோலியின் அணுகுமுறையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

Virat Kohli: விராட் கோலியின் 2021 லார்ட்ஸ் சம்பவம்

உதாரணத்திற்கு, இந்திய அணியின் 2021 லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியை சொல்லலாம். கடைசி நாளில் வெறும் 60 ஓவர்கள் மட்டும் கையில் இருக்க, எட்ட முடியாத தூரத்தில் இருந்த வெற்றியை இந்திய அணி அன்று தட்டித்தூக்கியதற்கு விராட் கோலியின் அந்த அணுகுமுறையே காரணம். கடைசி 60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச செல்லும்முன் வீரர்களிடையே பேசிய விராட் கோலி, “அடுத்த 60 ஓவர்கள், அவர்களுக்கு நரகத்தில் இருப்பதை போல உணர வைக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

#ENGvINDOnlyOnSonyTen #ENGvIND #Siraj pic.twitter.com/XDathfvy6G

— Sony Sports Network (@SonySportsNetwk) August 16, 2021

லார்ட்ஸ் டெஸ்ட் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியாகும். 4 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அடுத்த 5வது போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ஓராண்டு கழித்து நடந்த போட்டியின்போது விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஸியில் இல்லை. பும்ரா தலைமையில் அந்த 5வது டெஸ்டை இந்திய அணி இழந்தது. 1986ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்தில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. ஒருவேளை, 5வது போட்டியும் அப்போதே விராட் கோலியின் தலைமையில் நடந்திருந்து, அதிலும் விராட் கோலி வென்றிருந்தால் வரலாறே இன்னும் மாறியிருக்கும்.

Virat Kohli: தேவ தூதன் விராட் கோலி

2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. அதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் எனலாம். இங்கிலாந்தும் வென்றிருந்தால் விராட் கோலியின் வரலாறு இன்னும் பலமாகியிருக்கும். ஆனால், இப்போதும் அது குறைந்து போகவில்லை. இந்திய அணியின் தற்போதைய உச்ச நிலைக்கு விராட் கோலி ஆற்றிய பங்கு அளவிடவே முடியாது. எனவே விராட் கோலிதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய தேவ தூதன் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல், அவரின் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.