கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இன்றைய ஆட்டத்திற்கு இந்திய அணியைத்தான் பாராட்ட வேண்டும். 300+ ரன்களை துரத்துவது எப்போதும் எளிதல்ல, இருப்பினும் நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம். அதேசமயம் எங்களுடைய பந்துவீச்சு பிரிவும் இந்திய பேட்டர்களுக்கு எதிராக தடுமாறியது.
அதனால் உலகக் கோப்பைக்கு முன் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இவை. இத்தொடர் முழுவது நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரிக்கு குறைவாகவே இருந்தோம். அதனால் பல வாய்ப்புகளை தவறவிட்டோம். பேட்டிங்கில் சில பவர்-ஹிட்டர்கள் தேவை, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நாங்கள் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். மேலும் இதற்காக தீவிர பற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.