புதுடெல்லி: வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பகிர்ந்த ட்ரோலர்களை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாக பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய செயல்கள் அவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூட அமையலாம். குடிமைப் பணி அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பதற்கில்லை. மேலும் இவை ஒழுக்கநெறியற்ற செயல். ஒவ்வொருவரும் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். சுய கட்டுப்பாடு தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோல் செய்யப்பட்ட மிஸ்ரி! இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
அவரை ‘துரோகி’, ‘தேசத்துரோகி’, ‘நம்பிக்கை துரோகி’ என்ற அவதூறான வார்த்தைகள் மூலம் சமூகவலைதள வாசிகள் வசை பாடினர். அதிலும் சிலர் மிஸ்ரியின் மகள்களின் குடியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்பி, விமர்சித்தனர். மிஸ்ரி மட்டுமல்லாத அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் நெட்டிசன்கள் அவதூறாகப் பேசினர்.
இந்நிலையில்,அவருக்கு முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ், அரசியல் பிரமுகர்கள் அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி ஆகியோர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.
‘லாக்’ செய் மிஸ்ரி: இதற்கிடையே தன் மீதான அளவுக்கு மீறிய வசைபாடல்கள், இணைய மிரட்டல்களால், வெளியுறவுத் துறையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் விக்ரம் மிஸ்ரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தையே ‘லாக்’ செய்து பிரைவசியை நாட வேண்டிய அவலச் சூழல் ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பகிர்ந்த ட்ரோலர்களை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேலும் வாசிக்க>> விக்ரம் மிஸ்ரி மீது ‘ட்ரோல்’ – போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இணையத்தில் நடந்தது என்ன?