புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
‘லாக்’ செய் மிஸ்ரி: தன் மீதான அளவுக்கு மீறிய வசைபாடல்கள், இணைய மிரட்டல்களால், வெளியுறவுத் துறையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் விக்ரம் மிஸ்ரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தையே ‘லாக்’ செய்து பிரைவசியை நாட வேண்டிய அவலச் சூழல் ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், அவருக்கு முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ், அரசியல் பிரமுகர்கள் அகிலேஷ் யாதவ, அசாதுதீன் ஓவைசி ஆகியோர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். அநாகரிக நெட்டிசன்கள் மீது அவர்கள் நடவடிக்கை கோரியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலும், பதிலடியும்! ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தின.
போர் நிறுத்த அறிவிப்பு: இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (மே.10) மாலை, அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் அறிவித்தார்.
ட்ரோல் செய்யப்பட்ட மிஸ்ரி! அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரை ‘துரோகி’, ‘தேசத்துரோகி’, ‘நம்பிக்கை துரோகி’ என்ற அவதூறான வார்த்தைகள் மூலம் சமூகவலைதள வாசிகள் வசை பாடினர். அதிலும் சிலர் மிஸ்ரியின் மகள்களின் குடியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்பி, விமர்சித்தனர். மிஸ்ரி மட்டுமல்லாத அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் நெட்டிசன்கள் அவதூறாகப் பேசினர்.
இந்நிலையில்,அவருக்கு முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ், அரசியல் பிரமுகர்கள் அகிலேஷ் யாதவ, அசாதுதீன் ஓவைசி ஆகியோர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.
நிருபமா மேனன் ராவ்: முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ் கூறுகையில், “இது வெட்கக்கேடானது. நாகரிகத்தின் அத்தனை ரேகைகளையும் இந்த ட்ரோலிங் மீறியுள்ளது. மிஸ்ரி அர்ப்பணிப்பு மிகுந்த அதிகாரி. அவர் இந்தியாவுக்காக தொழில்முறை நேர்த்தியுடன் சேவையாற்றியுள்ளார். அவரை வசைபாடுவது எவ்விதத்திலும் சரியாகாது. இத்தகைய விஷமத்தனமான வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிஸ்ரிக்கு தூதரக அதிகாரிகள் ஓரணியில் நின்று ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
அகிலேஷ் யாதவ்: போர் நிறுத்தம் போன்ற முடிவுகளை எடுப்பது அரசாங்கமே தவிர தனிப்பட்ட எந்த அரசு அதிகாரியும் இல்லை. ஆனால், சில சமூகவிரோதிகள் எல்லா எல்லைகளையும் மீறி அதிகாரியையும், அவரது குடும்பத்தினரையும் வசை பாடியுள்ளனர். இந்தச் சூழலில் பாஜக அரசோ, அல்லது அமைச்சர்களோ அவரது மாண்பைக் காப்பாற்றவும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை குறித்தும் வாய்திறக்கவில்லை.” என்று எக்ஸ் தளத்தில் இந்தியில் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அசாதுதீன் ஓவைசி: “மிஸ்ரி நாகரிகமான, நேர்மையான மனிதர். கடினமாக உழைக்கும் அதிகாரி. நமது குடிமைப் பணியியல் அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுப்படி இயங்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்க முடிவுக்கு அதிகாரிகளை வசைபாடக் கூடாது.” என்றார்.