புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போனவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச உரையாற்றினார்.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு இந்தியா அஞ்சாது என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ராணுவ மோதல் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, படைகள் களத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வருகை தந்தார். விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், வீரர்களின் துணிச்சலை பாராட்டினார். வீரர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
தனது இந்த கலந்துரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இன்று அதிகாலையில், நான் AFS ஆதம்பூருக்குச் சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.