இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் ஆயுதப்படைகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதில்,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 11 பேரில், 6 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும், 5 பேர் பாகிஸ்தான் விமானப்படையையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் கெல்லர்: இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் சோபியன் அருகே ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சோபியான் அருகே ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை மற்றும் அழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.